மஞ்சள் நிறத்திலான லாப் எரிவாயு சிலிண்டரை நீல நிறமாக மாற்றி பெண் ஒருவர் மோசடி செய்ச சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹட்டன்- டிக்கோயா நகரிலுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு (நீல நிறம்) முகவர் விற்பனை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிக்கோயா நகரிலுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு முகவர் விற்பனை நிலையமொன்றில், மஞ்சள் நிற லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நீல நிற வர்ணம் பூசி, நீல நிற சமையல் எரிவாயுவை பெற்றுக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இம்மாதம் 27 ஆம் திகதி, முச்சக்கர வண்டியொன்றில் வருகை தந்த பெண்ணொருவர், லிட்ரோ சமையல் எரிவாயு வெற்று சிலிண்டரை கையளித்து விட்டு, அதற்கு பதிலாக மற்றுமொரு சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த முகவர் நிலையத்துக்கு சமையல் எரிவாயு விநியோகத்துக்காக வருகை தந்த லொறியில், வெற்று சமையல் சிலிண்டர்களை ஏற்றும் போது, குறித்த மஞ்சள் நிறம் வெளியே தெரிந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திலுள்ள பாதுகாப்பு கமெராவை பரிசோதித்த விற்பனை நிலைய உரிமையாளர், பெண்ணொருவர் குறித்த சிலிண்டரை கொண்டு வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், குறித்த வர்த்தகர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.