பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை, அதிகமான மரக்கறிகள் மெனிங் சந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, காய்கறிகளின் மொத்த விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை அடுத்து, நாட்டில் பெரும்பாலான சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வியாபாரிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ள.
இந்நிலையில், நேற்றுடன் (28) ஒப்பிடுகையில் இன்று மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளமை அவதானிக்க முடிவதாக அகில இலங்கை கூட்டு பொருளாதார வர்த்தக மையங்கள் மற்றும் மெனிங் வர்த்தகர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.உபசேன தெரிவித்தார்.
நேற்றைய தினம் நாட்டின் அனைத்து பொருளாதார வர்த்தக மையங்களும் திறக்கப்பட்டதையடுத்து அதிகமான மரக்கறிகள் இவ்வாறு சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், வாடிக்கையாளர்களின் வருகை குறைவடைந்ததன் காரணமாக மரக்கறிகளின் விற்பனை மந்தமடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து தொடர்ந்தும் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக எச்.எம்.உபசேன தெரிவித்தார்.