November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 டொன் சீனி பறிமுதல்

இலங்கையில் சீனி பற்றாக்குறையை ஏற்படுத்தும் வகையில் வத்தளை, மாபோல பிரதேசத்தில் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5000 டொன் சீனி நுகர்வோர் விவகார அதிகார சபையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் குறித்த பகுதிகளில் உள்ள சீனி களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் அங்கு சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இதுபோன்று சீனியை பதுக்கி வைத்துள்ள களஞ்சியசாலைகள் குறித்து தகவல் தெரிந்தால் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக அதன் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேல் மாகாணத்தில் யாரிடமாவது இவ்வாறு சீனி களஞ்சியம் இருந்தால் அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் கடந்த சில வாரங்களில் சீனி விலை பெருமளவு அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் 120 ரூபா வரையான விலைக்கு விற்பனையான சீனி கிலோவொன்று தற்போது சந்தையில் 230 ரூபா வரையான விலைக்கு விற்பனையாகின்றன.