January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் ‘கேமிங் கோளாறு’ நோய்!

இணையவழி கல்வியைத் தொடர்ந்து, கையடக்கத் தொலைபேசி விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் அடிமையாவது அதிகரித்து வருவதாக கராப்பிட்டிய மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும்பாலான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ‘கேமிங் கோளாறு’ (Gaming disorder) நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மனநல ஆலோசகர் மருத்துவர் ரூமி ரூபன்,  கொழும்பு ஊடகமொன்றுக்கு  பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.

அந்தப் பேட்டியில், ‘கேமிங் கோளாறு’ சிறுவர்களுக்கு மட்டுமல்லாது இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கேமிங் கோளாறு’ உண்மையானது எனவும், தற்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச நோய்களில் ஒன்றாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள கொரோனா தொற்று நோய் சூழ்நிலையால், பாடசாலைக் கல்வி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் இணையவழி படிப்பைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இதுவரையில் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தாத சிறுவர்களும் தங்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, 14 முதல் 24 வயது வரையிலான சிறுவர்களும், இளைஞர்களும் பெருமளவில் கேமிங் கோளாறு என்று அழைக்கப்படுகின்ற சிகிச்சையைப் பெற்று வருகின்றனர் என மனநல ஆலோசகர் மருத்துவர் ரூமி ரூபன் கூறியுள்ளார்.

பெரும்பாலான விளையாட்டுகள் பயனர்களை அடிமையாக்கி உள்ளே சிக்க வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான கையடக்கத் தொலைபேசி விளையாட்டுகள் வன்முறை பின்னணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, கொலை போன்ற கொடூரமான செயல்களை நோக்கி அவர்களின்மனதைத் தூண்டுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலான விளையாட்டுகள் குறிப்பிட்ட நிலைகளை அடைந்த பிறகு பரிசுகளை வழங்குகின்றன. எனவே, விளையாடுபவர்கள் தங்கள் இலக்குகளை அடைய அந்த நிலைகளை கடந்து செல்வார்கள்.

பல மணிநேரங்களுக்கு கேமிங் நோக்கங்களுக்காக கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய பிறகு, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தானாகவே சுய நினைவை இழந்தவர்களாக மாறிவிடுகின்றனர் என்று மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் திடீரென்று கோபமடைந்து அவர்களின் நடத்தை வன்முறையாக மாறும். சிறுவர்கள் தங்களை கேமிங் கதாபாத்திரங்களாகக் கருதி, விளையாட்டுகளில் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களைப் போல வாழ்வதற்கு பழகுகிறார்கள். அவர்கள் அந்த அனிமேஷன் படங்களைப் போல ஆடை அணிந்து அவர்களைப் போல் செயல்படுகிறார்கள் என மருத்துவர் ரூபன் கூறியுள்ளார்.

சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் இத்தகைய கோளாறால் பாதிக்கப்பட்டால், மனநல மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை சிக்கனமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதேபோல இணையவழி கல்விக்காக மட்டுமே சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்கிவிட்ட பிறகு அவற்றை நிறுத்தி வீட்டில் குழு வேலை போன்ற மற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும் என்று மருத்துவர் மேலும் கூறியுள்ளார்.