ஜனாதிபதி ஆணைக்குழு தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து, உண்மை நிலையை அறிந்து, பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13 ஆவது பிரிவுக்கமைய ஆலோசனை சபை உறுப்பினர்களை பெயரிட்டுள்ளமை தொடர்பாக குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சபை பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றவர்கள், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, இவர்களுக்கான விடுதலைப் பொறிமுறையினை கண்டறிந்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனை சபையில் ஓய்வு நிலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வு பெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகள் தங்களது பிரச்சினைகளை இச்சபையிடம் முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று, ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த முன்னேற்ற முன்னெடுப்பினை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வரவேற்றுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனை சபை தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட சிறை வாழ்வுக்கு தீர்வு வழங்க வேண்டும் குரலற்றவர்களின் குரல் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், குறைந்த வேகத்திலாவது அசையத் தொடங்கியிருப்பது சிறந்த விடயமே என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.