July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரமற்ற ஒக்ஸிமீட்டர்கள் விற்பனை; கட்டுப்பாட்டு விலையை வெளியிட அரசு முடிவு!

நோயாளர்களின் ஒக்ஸிஜன் உள்ளடக்கத்தை அளவிட பயன்படும் ஒக்ஸிமீட்டர்களுக்கான கட்டுப்பாட்டு விலையை அறிவிப்பது தொடர்பில் ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளானவரின் ஒக்ஸிஜன் அளவை அளவிடுவதற்கு ஒக்ஸிமீட்டர்கள் முக்கியமானவை, இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தரமற்ற ஒக்ஸிமீட்டர்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,500 தரமற்ற ஒக்ஸிமீட்டர்கள் கொழும்பு நகரில் உள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்படாத பல்ஸ் ஒக்ஸிமீட்டர்கள்  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை,நாட்டிற்கு கடத்தப்பட்டமை இலங்கை சுங்கத்துறை மூலம் கண்டறியப்பட்டதாகவும் இந்தச் சாதனங்கள் மிகக் குறைந்த தரம் வாய்ந்தவை என்றும் அமைச்சு தெரிவித்தது.

ரூ. 1,350க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த தரமற்ற ஒக்ஸிமீட்டர்களை பயன்படுத்தி ஒக்ஸிஜனின் துல்லியமான  வீதத்தை சரியாக அளவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்த ஒக்ஸிமீட்டர்களுக்கான கட்டுப்பாட்டு விலையை வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக வெளியிடுவது குறித்தும் ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சு விவாதங்களை தொடங்கியுள்ளது.

அதன்படி, நாட்டின் மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே ‘பிளஸ் ஒக்ஸிமீட்டரை’ விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இதன் விலை ரூ. 4,000 முதல் ரூ. 8,000, வரை இருக்கும் என ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சு மேலும் கூறியது.