இலங்கையின் அரசியலமைப்புக்கு 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் பின்னணியில் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் நிகழ்ச்சித் திட்டமும் இருப்பதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘புதிய திருத்தம் என்பது ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான வெறும் பதவி மோகம் மட்டும் அல்ல, அது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை என்றும்’ அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 20 ஆவது திருத்தப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
“யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்டத் திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை நிச்சயம் ஏற்படும்” என்றும் அவர் கூறினார்.
விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் சுருக்கம்:
“லீ குவான் யூ” க்களாக பரிணமிக்க விரும்புபவர்கள் தமது பக்கச்சார்பான சிந்தனைகளைக் கைவிட்டால் தான் நாட்டிற்கு நன்மை செய்யலாம். லீ குலான் யூ சீன பௌத்த பாதையில் செல்லவில்லை. அவர் சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் நேசிப்பவர்.
சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது.
ஆகவே இந்த 20வது திருத்தச்சட்ட மூலம் அதிகாரத்தை தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.
‘எமது வளங்கள் சூறையாடப்படுகின்றன”
ஜனாதிபதி செயலணி (Task force) என்ற அமைப்பின் கீழ் சிறுபான்மையினரின் காணிகள் திணைக்களங்களினால் கையேற்கப்படுகின்றன.
பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் வடக்கு கிழக்கில் குவிந்துள்ளார்கள்.
வனத் திணைக்களம் போன்றவை மக்களின் பாராம்பரிய காணிகளைக் கையேற்றுக் கொண்டிருக்கின்றன. அரச அரவணைப்பின் பின்னணியில் சட்டத்திற்கு புறம்பாக எமது வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன.
மகாவலியின் கீழ் பிற மாகாண மக்கள் எங்கள் மாகாணங்களில் குடியேற்றப்படுகின்றனர். ஆனால் வாக்குறுதி அளித்த மகாவலி நீர் ஒரு சொட்டேனும் வடக்கு நோக்கி வரவில்லை.
கடந்த 20 வருடங்களாக இனப்பிரச்சனையை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக மக்களிடத்தில் ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் அதனை நிறைவேற்றவில்லை.
அதேபோல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஆணைகேட்டு ஆட்சிபீடம் ஏறிய எவரும் கூட அதையும் நிறைவேற்றவில்லை.
ஆனால், இந்த அரசாங்கம் கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை ஏதோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சம்பவமாக உருவகித்து ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் கூட்ட முனைகின்றது.
இதனால் தான் ஜனாதிபதி கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
ஒரு கள்வனையோ ஒரு குண்டுதாரியையோ பிடிக்கவேண்டுமாக இருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால்தான் பிடிக்க முடியும் என்ற இந்த சிந்தனை முட்டாள் தனமானதாக அல்லவா இருக்கிறது.
‘பூமராங் போன்று திரும்பிவரும்’
உண்மையில் ஏப்ரல் சம்பவம் இடம்பெறுவதற்கு பாதுகாப்பு படை அதிகாரிகளின் அசட்டையும் பாதுகாப்பு படைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தமையுமே பிரதான காரணங்காளாகும்.
நீதித்துறை, காவல்துறை மற்றும் பொது அலுவலர் சேவை ஆகியவற்றை சுதந்திரமாக செயலாற்றவிட்டிருந்தால் ஏப்ரல் அனர்த்தம் நடைபெற்றிராது.
உலகில் அநேகமான நாடுகளில் ஜனாதிபதி முறை ஆட்சி இல்லை. அப்படியாயின் அந்த நாடுகளில் எல்லாம் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறதா? அல்லது ஜனாதிபதி முறையுள்ள நாடுகளில் பாதுகாப்பு பிரச்சனை இல்லாமல் இருக்கின்றதா?
இந்த அரசு இன்னும் 6 மாதகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்டத் திருத்தத்தை அவசர கதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.
இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்டத் திருத்தம், உங்கள் மீதும் உங்கள் எதிர்கால சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும்.
உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள். இரண்டு தரப்பிலும் உள்ள எனதருமை சகாக்களே! இந்த 20 ஆவது சட்டத் திருத்தம் நாளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள்.
மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவேண்டும்”