இலங்கையில் ஒக்டோபர் 2 வரை ஊரடங்கை நீடிப்பதன் மூலம் 10,000 வரையான கொவிட் -19 இறப்புகளை தடுக்க முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனமும் இலங்கையின் சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
அறிக்கையின்படி, தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது செப்டம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டால், சுமார் 7,500 இறப்புகளை தடுக்க முடியும் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் கொவிட் காரணமாக பலியாகுபவர்களின் உயிர்களை காப்பாற்ற அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, குறைந்தபட்சம் செப்டம்பர் 18 வரை கடுமையான கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியான கொவிட் தொற்று நிலைவரப்படி,நாட்டில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.
அத்தோடு, நாட்டில் அடையாளம் காணப்படும் கொவிட் பரவல் 90% டெல்டா மாறுபாட்டை காட்டுவதாகவும் இப்போது மேல் மாகாணம் தவிர மற்ற மாகாணங்களுக்கும் டெல்டா வைரஸ் பரவியிருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
நாட்டின் சுகாதார துறை நெருக்கடியை சந்தித்துள்ளதோடு, மருத்துவமனைகள் முழுத் திறனில் இயங்கி வருவதாகவும் வீடுகளுக்குள் வைரஸ் பரவி விட்டது என்று அறிக்கை கூறுகின்றது.
குறிப்பாக டெல்டா மாறுபாடு வேகமாக பரவும் சூழலில், மக்களுக்கு தடுப்பூசி வழங்குவது உயிரிழப்பை குறைக்க வழிவகுக்கும் என்று இலங்கையின் சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.