
இலங்கையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்ற தலைப்பில் தான் கூறியதாக கொழும்பு பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘த ஐலன்ட்’ பத்திரிகையின் இணையதளத்தில் ஊடகவியலாளர் தினசேன ரனதுங்க வெளியிட்டுள்ள செய்தியை சுமந்திரன் மறுத்துள்ளார்.
‘அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் அந்த தீர்வை ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கும் மத்தியஸ்தராக அமெரிக்கா செயற்பட வேண்டும்’ என்றும் எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிக்கு பின்னர் தான் யாழ்ப்பாணம் செல்லவில்லை என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐலன்ட் பத்திரிகையில் ஊடகவியலாளர் தினசேன ரனதுங்க தனக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராக விஷமக் கதைகளை வெளியிட்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.