July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுமி ஹிஷாலினி மரணம்; கொவிட் தொற்றுக்குள்ளான ரிஷாட் பதியுதீனின் மாமனாரின் பிணை மனு நிராகரிப்பு!

சிறுமி ஹிஷாலினி மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மாமனார் தாம் கொவிட் தொற்றுக்குள்ளானதை காரணம் காட்டி விடுத்திருந்த பிணை கோரிக்கை மனு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை கோரிக்கை குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம பிணை கோரிக்கையை நிராகரித்தார்.

ரிஷாட் பதியுதீனின் மாமனார் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன இந்த பிணை கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவித்த சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன, கொவிட் நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை  அவர் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும் சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளமையினால் மாத்திரம் பிணை வழங்க முடியாது என்று பிணை கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

அத்தோடு சந்தேக நபருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.