இலங்கையில் இரண்டாவது நாளாகவும் 200 க்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று (26) 214 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதில் 94 பெண்களும் 120 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 151 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 30-59 வயதுக்குட்பட்ட 58 பேரும் 30 வயதுக்குட்பட்ட ஐவரும் உயிரிழந்தவர்களிடையே அடங்குகின்றனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று (27) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4,591 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாகவும் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4, 500 கடந்து பதிவாகியுள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 16,961 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 55,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் இவர்களில் மொத்தம் 14,152 கொவிட் நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அவந்தி கருணாரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள நோயாளிகளில் 68 வீதமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள், நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலைமைகளை தொடர்ந்து நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வர இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் ஊரடங்கு பயனுள்ளதாக இருக்காது என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
கொவிட் தொற்று அதிகரிப்பை தடுக்க நாட்டை முடக்குவது மட்டுமே தீர்வு அல்ல, மேலும் நோயை எதிர்த்துப் போராடும் முயற்சியில் மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்றார்.
மக்கள் தங்கள் தனிப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றினால், நோய் பரவுவதை தடுக்க முடியும் என்றும், மக்களின் ஒத்துழைப்பு இதில் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 53,191 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.