தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில், அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்போது, நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு நிலைமையை, செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதோடு, இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பிரதேசங்கள் காணப்படுமாயின், அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள, சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரிதொரு காரணத்தால் தடுப்பூசியின் முதலாம் டோஸைப் பெற்றுக்கொள்ள முடியாத நபர்கள் காணப்படுவார்களாயின், இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களில் வைத்தே அவ்வாறானவர்களுக்கும் முதலாவது டோஸ் தடுப்பூசியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தொடர்பில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டங்களை, பிரதேச ரீதியில் அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டுமென்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது கூறியுள்ளார்.
இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை பரிந்துரைகளை முன்வைத்த வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை முக்கியஸ்தர்கள் ஆகியோர், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென்று, ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுமாயின், உடனடியாக அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் நபர்கள், உரிய மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் வெகு விரைவில் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புவதாக, ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நோய்க்கு ஆளாகாத நிலையில் அல்லது வீட்டில் எந்தவொரு நபரும் தனிமைப்படுத்தப்படாத நிலையில் நபரொருவர் உயிரிழப்பாராயின், அவருக்கான இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வது தொடர்பில் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தைத் தொடர்ந்துச் செயற்படுத்துவது தொடர்பிலும், இந்தக் கூட்டத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீடுகளில் சிகிச்சைப் பெற்றுவரும் கொவிட் நோயாளிகளை, தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என, பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில், பொதுமக்களின் நாளாந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதன் அவசியம் தொடர்பில், ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
தேசிய பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொண்டே, வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை, அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை, நிவாரண விலைக்குப் பெற்றுக்கொடுக்க, சதொச ஊடாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில், அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தியுள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள மக்களுக்கு, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய தேசிய ஔடதங்களைப் பெற்றுக்கொடுக்க சுதேச மருத்துவ அமைச்சு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி விவரித்துள்ளார்.