July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் உடல்நலம் குறித்து வதந்தி: யோஷித்த பதில்!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகள் தொடர்பில் பிரதமர் அலுவலக பணிக்குழாமின் பிரதானி யோஷித்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாக வில்லை எனவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் யோஷித ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்துள்ள அவர், பிரதமர் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதமர் தனது வழமையான பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக குறிப்பிட்டுள்ள யோஷித, இன்று காலை கொவிட்  செயலணியின் கலந்துரையாடலில் பிரதமர் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் தொற்று நோயை சமாளிக்க கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று யோஷித ராஜபக்‌ஷ பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே போன்று இரு தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் உடல்நலம் தொடர்பிலும் இவ்வாறான வதந்திகள் வெளியாகியிருந்தான.

எனினும் பொலிஸ் தலைமையகமும் அவற்றை மறுத்து செய்தி வெளியிட்டிருந்ததோடு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, தாம் உடல் நலத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் செல்பி படமொன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் இன்று அவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.