November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் சுய பரிசோதனை கருவிகளை மக்களுக்கு வழங்க சுகாதார அமைச்சு ஆலோசனை

தாமக்கு கொவிட் தொற்று உள்ளதா என்பதை தாமாகவே பரி சோதித்துக்கொள்ளும் வகையான ‘என்டிஜன்’  சுய பரிசோதனை கருவிகளை இலங்கை மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்திவருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார துறையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது,  இந்த விடயம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் தொற்றை அடையாளம் காணும் சுய கண்டறிதல் கருவி மிகவும் பயனுள்ளது என்பதால்  சுகாதார அமைச்சரும், சுகாதார அமைச்சகத்தின் ஆய்வக சேவைகள் பிரிவும் இதனை பெற்றுக்கொள்வது  தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சுய நோயறிதல் கருவிகள் வெளிநாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வசதி இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொவிட் சுய பரிசோதனை கருவிகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் மக்கள் தாங்களாகவே கொவிட் தொற்று பரிசோதனை செய்து கொள்ள முடியும் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ இன்று தெரிவித்தார்.

இதேவேளை,  கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரில் 86 சதவீதமானோர் பல்வேறு நோய்களுக்குள்ளானவர்கள் எனவும், 12 சதவீதமானோர் ஒரு டோஸ் தடுப்பூசியை மாத்திரம் போட்டுக்கொண்டவர்கள் என  சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களில் 2.5 சதவீதமானவர்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர், அவர்களும் ஏனைய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாத நிறைவிற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசியை ஏற்ற முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கியூபா நாட்டு தூதுவரை நேற்று சந்தித்த போதே சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டதன் பின்னர், மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.