January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நீல இரத்தினக் கல் தரச் சான்றிதழ் பெறுவதற்காக சுவிட்சர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது

இலங்கையின் இரத்தினபுரி, பெல்மடுல்லவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீல இரத்தினக் கல்லான ‘செரண்டிபிட்டி சபெயார்’ தரச் சான்றிதழை பெறுவதற்காக சுவிட்சர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த தகவலை இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் துறை அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள இரத்தினக் கல் ஆய்வகத்தில் மாணிக்கத்தை முழுமையாக பரிசோதித்த பிறகு தரச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சீனாவின் ஷங்காயில் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள உலகப் புகழ் பெற்ற இரத்தினக் கல் ஏலத்திலும் இந்தக் கல் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.

இரத்தினக் கல் சீன ஏலத்தில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இரத்தினக் கல் தொடர்பாக ஏற்கனவே பல நாடுகளிடம் இருந்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லொஹான் ரத்வத்த கூறினார்.

510 கிலோ கிராம் எடையுடைய இந்த வெளிர் நீல நிற இரத்தினக் கல் 2,000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரத்தினக் கல்லின் விற்பனை பெறுமதியிலிருந்து 10 சதவீத பணத்தை அரசு பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.