தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடைப் பட்டியலில் வைத்திருக்கும் பிரித்தானிய அரசின் முடிவில் தவறு உள்ளதாக அந்நாட்டின் ‘தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையம்’ தீர்ப்பளித்துள்ளது.
‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்’ பிரித்தானிய பிரதிநிதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த போதே ஆணையம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்’ பிரதிநிதிகள் 2018 டிசம்பரில் பிரித்தானிய அரசைக் கோரியிருந்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த உள்துறை அமைச்சு 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தனது முடிவை அறிவித்திருந்தது.
ஆனால் தடையை நீடிப்பதற்கு சொல்லப்பட்ட காரணங்களை ஏற்க முடியாது என மனுதாரர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டது.
குறிப்பாக விடுதலைப் புலிகளால் இப்போதும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்ட காரணத்திற்கு உரிய சான்றுகள் முன்வைக்கப்படவில்லை என மனுதாரர்களால் வாதிடப்பட்டது.
ஆனால், இலங்கையில் போர் முடிந்த 2009க்குப் பின்னரான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இலங்கையில் தாக்குதல்களை நடத்த முடியாத அளவுக்கு பலம் இழந்துவிட்ட நிலையில் உள்ள போதிலும், புலம்பெயர் ஆதரவாளர்களின் உதவியுடன் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் இராஜாங்க செயலாளர் சார்பில் வாதிடப்பட்டது.
எனினும், உள்துறை அமைச்சு தனது வாதத்தில் முன்வைத்த, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களும் அவற்றுக்கான சான்றுகளும் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடைப் பட்டியலில் வைத்திருக்கும் அளவுக்கு தேவையான நியாயமான காரணத்தை வழங்கவில்லை என்று மேன்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.