July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் சர்வதேச சுற்றுலாத்துறை அடுத்த வாரம் ஆரம்பம்’

கொவிட் -19 வைரஸ் பரவலால் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்திலிருந்து சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்குவதாகவும்,இலங்கை அங்கீகரித்துள்ள சகல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாட்டுக்கு வர முடியும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் மாத்திரம் கண்டிப்பாக இரண்டு தடுப்பூசிகளை ஏற்றியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் நாட்டின் தேசிய சுற்றுலா மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து தெரிவிக்கையில்,

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில இறுக்கமான தீர்மானங்களை எடுக்க நேர்ந்தது. அதற்கமைய சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்தோம்.அதேபோல் ஒரு சில நாடுகள் இலங்கைக்கு பயணிகளை அனுப்புவதில்லை என்ற தீர்மானத்தையும் எடுத்துள்ளனர்.அந்த நாடுகளில் சில நாடுகள் இன்னமும் தடையை நீக்கவில்லை.எனினும் 122 நாடுகளுக்கு அதிகமான நாடுகள் இப்போதும் இலங்கைக்கான சுற்றுலாத் துறைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆகவே அடுத்த வாரத்தில் இருந்து சர்வதேச சுற்றுலாத் துறைக்காக நாடு திறக்கப்படுகின்றது.வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொவிட் சட்ட விதிமுறைகளை பின்பற்றி இலங்கைக்கு வர முடியும். ‘சுற்றுலா குமிழி’ முறைமைக்கு அமைய அவர்கள் வர முடியும். இலங்கையில் வழமையாக கையாளும் பி.சி.ஆர் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய நாட்டில் 22 சுற்றுலா பிரதேசங்களுக்கு செல்ல அனுமதி உண்டு.

அதேபோல்,இந்தியாவில் இருந்து வருவோர் கண்டிப்பாக தமது இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் அனுமதி வழங்கப்படாது.அவ்வாறு இரண்டு தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டு தமக்கான உடல் தகுதியை நிரூபித்தால் அவர்களுக்கு சாதாரணமாக கொவிட் வைரஸ் பரவல் நிலைமைக்கு முன்பிருந்தவாறு நாட்டின் சகல பகுதிகளுக்கும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் திருச்சி, சென்னை – பலாலி விமான சேவைகள் முன்னெடுக்கப்படுவது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.விமான சேவைகளை முன்னெடுக்க நாம் தயாராகவே உள்ளோம்.ஆனால் இந்தியாவே விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. விரைவில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.