October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தோல்வியடைந்த இந்த அரசால் நாட்டை நிர்வகிக்க முடியாது’

“இந்த அரசால் தமது அரசில் அங்கம் வகிப்பவர்களையே நிர்வகிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர்கள் எவ்வாறு நாட்டை நிர்வகிப்பர்? எவ்வாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பர்? தோல்வியடைந்த இந்த அரசால் இவை இரண்டையும் செய்யவே முடியாது.”என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த அரசு மக்களுக்கான அரசு அல்ல.மக்களாட்சி அரசு எனக் கூறிக்கொண்டே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது.வறிய மக்களை துன்புறுத்தி வாழும் அரசாகவே தற்போதைய அரசு உள்ளது.

கொரோனா நிதியம் அமைக்கப்பட்டது. அதன் ஊடாக நிதி சேகரிக்கப்பட்டது. நாமும் நிதியை வழங்கியிருந்தோம். ஆனால், அதன் ஊடாக உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன எனத் தெரியவில்லை.ஏனெனில் உரிய நேரத்தில் கொரோனாத் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனையையேனும் செய்வதில்லை. மாறாக பி.சி.ஆர்.,அன்டிஜன் பரிசோதனைகளின் ஊடாக பெருமளவு உழைக்கின்றனர்.

அதேபோல்,தனிமைப்படுத்தலுக்காக மக்களை ஹோட்டல்களுக்கு அனுப்பி அதன் ஊடாக உழைக்கின்றனர்.இந்நிலையில், எமது சம்பளப் பணத்தை எந்த நம்பிக்கையில் அவர்களுக்கு தியாகம் செய்வது?

சஜித் பிரேமதாஸ, அரசு இந்த நடவடிக்கையை ஆரம்பிக்க முன்னர் எதிர்க்கட்சி என்ற வகையில் வைத்தியசாலைகளுக்கு உதவியுள்ளார். ஆகவே,நாம் எமது தலைவரை நம்புகின்றோம்.அதன் காரமணாக நாம் எமது தலைவரிடமே நிதியைக் கையளிப்போம்”என்று அவர் மேலும் தெரிவித்தார்.