
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த வருட நவம்பர் மாதத்திற்குள் கொவிட் தடுப்பூசிகளை செலுத்த முடியுமாக இருக்கும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தும் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்த பின்னர் மூன்றாவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு சுவசிரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இலங்கைக்கான கியூபா தூதுவர் அந்ரேஸ் ஹரிடோவுடனை சந்தித்து கலந்துரையாடும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசித் திட்டம் தொடர்பிலும் மற்றும் கியூபாவின் சுகாதார சேவை தொடர்பான அனுபவங்கள் மற்றும் தொழிநுட்ப விடயங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது தமது நாட்டில் நூறுவீதம் கியூபாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியே பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு உலக சுகாதார தாபனம் அனுமதி வழங்கிய பின்னர் மற்றைய நாடுகளுக்கு அதனை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கியூபா தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.