இலங்கை அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, துன்பங்களை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தனிமைப்படுத்தப்படும் போது கொடுக்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு 1998 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்ட பின்னர் நாட்டிற்கு சௌபாக்கியத்தைக் கொண்டுவருவதாக பெருமை பேசிய அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பாதுகாப்பதற்கான கூட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் ஒவ்வொரு நாளையும் கடத்துவதற்காக தலைப்புச் செய்திகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.