பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவான மக்கள் புத்தளத்துக்கு வருகை தருவதால் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக, நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தைச் சேர்ந்த பெருமளவானோர் இவ்வாறு புத்தளத்துக்கு வருவது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலே இவ்வாறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் புத்தளத்துக்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புத்தளத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் நெருக்கடியான சூழ்நிலையை காணமுடிவதாக அங்குள்ள செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எது எவ்வாறாயினும், சினோபார்ம் தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ரஞ்சித் படுவன்துடாவ கூறியுள்ளார்.