January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது.அந்த வகையில் புதன்கிழமை மாலை அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை பெறுபேறுகளின்படி 239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

மொத்தமாக 10,725 நபர்களுக்கு இற்றைவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தை விட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு,இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (24) கணக்கெடுப்பின்படி 213 நபர்கள் இதுவரை இறப்புக்குள்ளாகியுள்ளார்கள்.மேலும் ,3686 குடும்பங்களை சேர்ந்த 10,548 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே,யாழ்.மாவட்டத்தில் பொதுமக்கள் இறுக்கமாக சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது.சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றுவதுடன்,மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும்.

மேலும், சுகாதார நடைமுறைகளான முக கவசம் அணிதல்,சமூக இடைவெளி பேணல்,தேவையற்ற நடமாட்டம்,ஒன்று கூடல்களை தவிர்க்க வேண்டும்.எனவே இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எம்மையும் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை எழுந்து நடமாட முடியாத வயோதிபர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை சுகாதார தரப்பினர்,கிராம சேவையாளர் மற்றும் இராணுவத்தினரும் கைகோர்த்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள்.

தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக் கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக,இறப்புக்களை தவிர்க்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

ஆகவே பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி தங்களையும் ,சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் தடுப்பூசியினைப் பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியமென அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.