12 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி விரைவில் ஏற்றப்படும்.அதற்காக தற்போது பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கு அமைய குறித்த இரண்டு தடுப்பூசிகளே ஏற்றப்படும் என கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களில் சிறுவர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.எனினும் காய்ச்சல் என்பது பொதுவாக சிறுவர்களுக்கு ஏற்படும் சகல நோய்களுக்கும் பிரதான அறிகுறியாகும்.ஆகவே காய்ச்சலை வைத்து மாத்திரம் சிறுவர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாது. எனினும் வேறு எந்த நோய் தாக்கமும் இல்லாது காய்ச்சல் அதனுடன் கூடிய தடிமன்,தொண்டை வலி போன்றன இருக்குமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது சிறந்ததாகும் எனவும் குறிப்பிட்டார்
அதேபோல் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் குருதியின் ஒட்சிசன் அளவு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். சாதாரணமாக பெரியவர்களுக்கு பரிசோதனை செய்யும் குருதியின் ஒட்சிசன் மதிப்பீட்டு கருவியில் இதனை செய்வது கடினமாகும்.
அதேபோல் சிறுவர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்குவதாக நினைத்து ஒவ்வாத விடயங்களை செய்ய வேண்டாம்.குறிப்பாக விட்டமின் சி வில்லைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என்பதை நாம் வலியுறுத்துவோம்.பெரியவர்களுக்கு பயன்படுத்தும் வில்லைகளின் தன்மை சிறுவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது.
மேலும் இரண்டு வயதிற்கு குறைந்த குழந்தைகளை மிக கவனமாக இந்த தொற்றில் இருந்து பாதுகாக்கவேண்டும்.அதேபோல் அவர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. கண்டிப்பாக அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டே சிகிச்சை வழங்க வேண்டும்.தாய்ப்பால் பருகும் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு தாய்ப்பால் வழங்குவதில் எந்த தடையும் இல்லை. எனினும் குழந்தையின் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க முன்னர் கைகளையும் மார்பகத்தையும் கழுவி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.அதேபோல் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
அதேபோல் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதன்போது 12 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்.அதற்காக தற்போது பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.இங்கும் அதிகளவில் சினோபார்ம் தடுப்பூசி கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் சிறுவர்களுக்கு அவற்றை எற்ற முடியாது.இதற்கு வேறு தனிப்பட்ட அரசியல் அல்லது போட்டித் தன்மையான விடயங்கள் காரணம் அல்ல.இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறித்த இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.சினோபார்ம் தடுப்பூசி இன்னமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதே காரணமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.