கொரோனா வைரஸ் தொற்று பரவுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டை முடக்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.நாட்டை முடக்குவது கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே தீர்வு அல்ல.எனவே தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு சுகாதார வழிமுறைகளுடன் நாட்டை திறக்க வேண்டும் என கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளின் தரவுகள் குறித்து எமக்கு எந்த பதிலையும் கூற முடியாது.தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி எமக்கு கொடுக்கும் தரவுகளை கொண்டும் கொவிட் செயலணிக் கூட்டத்தில் சுகாதார தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனையை கருத்தில் கொண்டே நாம் மக்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.அவ்வாறு இருக்கையில் தரவுகளை எம்மால் கண்காணிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கொவிட் வைரஸ் பரவல் கூடுகின்றது என்பதற்கு எமது பலவீனமான தீர்மானங்கள் காரணம் என கூறமுடியாது.உலகில் பல்வேறு நாடுகளில் இவ்வாறே வைரஸ் பரவல் அதிகரிக்கவும், அதேபோல் கட்டுப்படுத்தும் நிலைமையே காணப்படுகின்றது.
இதற்கு மக்களும் ஒரு விதத்தில் காரணம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.இதில் மக்களை நாம் குறை கூறவில்லை.எனினும் நாடு முடக்கத்தில் இருந்து விடுபட்டவுடன் மக்களின் அனாவசிய ஒன்றுகூடல்,அனாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.