July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: 311 பேர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக் காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (25) வழங்கிய விசேட உரையொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 365 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக இதுவரையில் 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 311 பேர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தெளிவின்மையால் சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவி வருகின்றது.

இதனால் சில தரப்பினர் இந்த விசாரணைகள் தொடர்பில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இரகசியத் தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், விசாரணைகள் தொடர்பில் முழுமையான விபரங்களை கூற முடியவில்லை எனவும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

இதனிடையே, சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் நடத்திய தொடர் குண்டு தாக்குதல் குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்லவெனவும், அது நீண்ட நாள் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டதை தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.