November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“சமூக ஊடகங்களில் பகிரப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்”; வைத்தியர்கள் எச்சரிக்கை!

கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியதர்ஷனி கலப்பட்டி அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் -19 வைரஸுக்கு எதிராக இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர், கொவிட் தொற்றை குணப்படுத்துவதாக கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் மருந்துகளால் ஏமாற்றமடைய வேண்டாம் என்று எச்சரித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விற்றமின்கள் சி, டி மற்றும் துத்தநாகம் போன்ற விற்றமின்களை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

கொவிட் நோயாளிகளுக்கு ஏற்படும் சில சிக்கல்களை தீர்ப்பதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் இருப்பதாகவும், எனினும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி அதனை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

விற்றமின் சி, மற்றும் டி , துத்தநாகம் போன்ற விற்றமின்களை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பேராசிரியர் பிரியதர்ஷனி கலப்பட்டி குறிப்பிட்டார்.

“கொரோனா வைரஸுக்கு எதிராக இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மட்டுமே இப்போது இருக்கும் ஒரே பாதுகாப்பு முறை” எனவும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பல்வேறு மருந்துகளை பல்வேறு தரப்பினர் ஊக்குவித்து வருகின்றனர்.அத்தகைய மருந்துகளால் ஏமாற வேண்டாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அத்தோடு, வீடுகளில் உள்ள கொவிட் நோயாளர்கள் காய்ச்சல் இருந்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் பரசிட்டமோல் எடுக்க வேண்டும். வயது வந்தவர் ஒரே நேரத்தில் இரண்டு மாத்திரைகள் என்ற விகிதத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் சிறுவர்களுக்கு அவர்களின் எடைக்கு ஏற்ப பரசிட்டமோல் கொடுக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

இது தவிர, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் மூக்கு ஒழுகுதல் அல்லது தொண்டை புண் போன்ற அறிகுறிகள் உள்ள நோயாளிகளால் மருத்துவர்களை தொடர்பு கொண்டு பொருத்தமான மருந்துகளை பயன்படுத்த ஆலோசனை பெற வேண்டும்” என்று மருத்துவர் தெரிவித்தார்.

அத்தோடு, நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் வைரஸ் தொற்றுக்கு ஆளான பிறகும் தங்கள் வழக்கமான மருந்துகளை நிறுத்தக்கூடாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியதர்ஷனி கலப்பட்டி அறிவுறுத்தியுள்ளார்.