November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது!

இலங்கையில் இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று (ஆகஸ்ட் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விரைவான கொரோனா பரிசோதனைகள் மூலம் மேலும் 4,484 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, 2020 மார்ச் மாதத்தில் நாட்டில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டது முதல் இலங்கையில் இதுவரை 403,285 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 2,91,396 பேர் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என, தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் மூன்றாவது அலையின் போதும் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பு, கம்பஹா,களுத்துறை மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, 90,813 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 72,427 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 41,391பேர் களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.

எனினும் இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 3,48,930 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்தோடு, 46,605 தற்போது நாட்டின் பல கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 7,750 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 4334 ஆண்களும் 3226 பெண்களும் அடங்குகின்றனர். அத்தோடு உயிரிழந்தவர்களில் 75.71 வீதமானவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர்.

23.27 வீதமானவர்கள் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆகும். மேலும் 1.02 வீதமானவர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.