அத்தியாவசிய சேவைகளுக்கான போலி அனுமதிப் பத்திரங்களை தயாரித்து அவற்றை பணத்துக்காக விற்பனை செய்த கும்பல் ஒன்றை மத்திய குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மத்திய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, பொரளை பொலிஸ் பிரிவில் கொழும்பு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் அவற்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் ஒருவரும், போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உதவிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து அச்சு இயந்திரம், ஸ்கேன் இயந்திரம், முத்திரை உபகரணம், போலியான அத்தியாவசிய சேவை முத்திரைகளுக்காக வைக்கப்பட்டிருந்த 100 ரோனியோ கடதாசிகள், போலி இறப்பர் முத்திரை,வெவ்வேறு மாவட்ட செயலகங்களினால் வழங்கப்படுவதை ஒத்த போலியான 12 அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரங்கள், 2 கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்காக தயாரிக்கப்பட்ட போலி அனுமதிப் பத்திரங்களை 3 ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபா வரையிலான விலைகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29, 30 மற்றும் 46 வயதுடைய தெமட்டகொட, வெள்ளவத்தை மற்றும் ஆட்டுப்பட்டித்தெரு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் சுய தொழில் சங்கத்தின் முன்னாள் இணைப்புச் செயலாளர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொரளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.