பத்து நாட்களாக நாடு முடக்கப்படுவதால் நாட்டிற்கு 15 ஆயிரம் கோடி ரூபா நாட்டம் ஏற்படுகின்றது.இதனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆராய முடியாத அழுத்தமான நிலையொன்று உருவாகியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
30 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் நாட்டை முடக்குவது குறித்த ஆய்வுகளை கைவிட்டுவிட்டு அதிகூடிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டிற்கான சர்வதேச முதலீடுகளுக்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்,
அதேபோல்,சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அடுத்த வாரத்தில் இருந்து சர்வதேச சுற்றுலாத்துறையை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.அதேபோல் ஏற்றுமதியை பலப்படுத்தும் வேலைத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். நாட்டைமுடக்கி வைத்திருக்க முடியும். ஆனால் அது தீர்வு அல்ல.
வெறுமனே சுகாதார தரப்பின் நிலைப்பாட்டை கேட்டு தீர்மானம் எடுக்காது பொருளாதார ஆய்வாளர்கள்,நிபுணர்களின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும்.கொவிட் அச்சுறுத்தல் நிலையொன்று உள்ளது என்பது சகலருக்கும் தெரிந்த ஒன்றாகும்.இது நீண்டகால சவாலாக உலகத்திற்கு உள்ளது.ஆகவே சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாட்டை கொண்டு செல்ல சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இல்லையேல் பொருளாதார ரீதியில் மட்டுமல்ல பசி பட்டினியில் மக்கள் சிக்கிக் கொள்ள நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.