January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாடு தொடர்ந்தும் முடக்கப்பட்டால் விரைவில் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்’

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இனியும் நாட்டை முடக்கினால் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி காண்பது மட்டுமல்லாது,மக்களுக்கான உணவுகளை பெற்றுக் கொள்ள முடியாது பஞ்சத்தை நோக்கி நகரும் சூழ்நிலை உருவாகும்.நாட்டின் கடன் நெருக்கடிகளை தவிர்க்கவும்,பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நாடாக நாம் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.குறிப்பாக பொருளாதார ரீதியில் தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுள்ளோம்.சர்வதேச மற்றும் தேசிய கடன் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.அரச வருமானம் வீழ்ச்சி கண்டு வருகின்றது.உற்பத்தி தடைப்பட்டுள்ளது,ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய பணம் இல்லை,வெளிநாட்டு கையிருப்பு விடயத்திலும் சிக்கல் நிலையில் உள்ளோம்.

சர்வதேச கடன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை =ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நாட்டுக்கான எரிபொருள் கொள்வனவு செய்யும் அளவிற்கு பணம் இல்லை.இரண்டு ஆண்டுகளாக நாம் கொவிட் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தை முன்னெடுக்க சிரமப்பட்டு வருகின்றோம்.இவ்வாறான நிலையில் நாட்டை தொடர்ந்தும் முடக்குவதால் பாரிய பொருளாதார நெருக்கடி நிலையொன்று உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.