January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களை தாக்கும் “சைலண்ட் ஹைபோக்ஸியா”; வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன், “சைலண்ட் ஹைபோக்ஸியா” என்ற மிகக் கடுமையான நோய் நிலைமை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை  பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை இந்த நோய் நிலைமை மிக அமைதியாக தாக்குவதாகவும் உயிரிழப்புவரை கொண்டு செல்வதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நோயிலிருந்து குணமடைந்த சிறுவர்களிடையே சாதாரண நடவடிக்கைகள் அல்லது விளையாட்டின் போது குருதியில் ஒக்ஸிஜன் அளவு குறைவடைவதாகவும் நிபுணர் கூறினார்.

சில சிறுவர்களிடம் இதன் போது சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றிய போதும் இன்னும் சிலரிடம் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை என அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக கொவிட் தொற்றுக்குள்ளான மற்றும் குணமடைந்த சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவை ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அளவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு ஒக்ஸிஜன் அளவு 94% க்கும் குறைவாகவோ இல்லது சராசரி ஒக்ஸிஜன் அளவு 96% க்கும் குறைவாகவோ இருந்தால், சிறுவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் வைத்தியர் அறிவுறுத்தினார்.

ஆல்பா வகை வைரஸ் தொற்று உள்ள சிறுவர்கள் அதிக அறிகுறிகளைக் காட்டவில்லை என்றாலும், டெல்டா வகை வைரஸ் பரவுவதால் அறிகுறிகள் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுடன் சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் தீவிர சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அத்தோடு கொவிட் நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்கும் முறைக்கமைய அதிகமான சிறுவர்கள் வீடுகளில் இருப்பதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகளை வழங்குவது குறித்து சிறுவர்கள் நல மருத்துவர்கள் சங்கம் ஏற்கனவே விவாதித்து வருவதாகவும் வைத்தியர் நளின் கிதுல்வத்த மேலும் தெரிவித்தார்.