November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கூட்டணி அரசாங்கத்தின் ஆரோக்கியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை”; அமைச்சர் டலஸ் அழகப்பெரும

கூட்டணி அரசாங்கத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதன் ஆரோக்கியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை  தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (24) இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘அமைச்சரவை கூட்டத்தின் போது சகல அமைச்சர்களுக்கும் தமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் கொடுக்கப்பட்ட பிறகு பங்காளி கட்சிகளின் தலைவர்களால் கடிதம் ஒன்றை தயாரித்து அதற்கு கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்புகின்ற இரட்டை வேடம் என்ன’ என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும கருத்து தெரிவிக்கையில்,

கூட்டணி அரசியலில் மாறுபட்ட கருத்து வேறுபாடுகள், பல்வேறு முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் என்பன செயல்படுத்தப்படுவதாகவும், இது இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கூட்டணி அரசியலில் காணப்படுகின்ற பொதுவான விடயம்.

கூட்டணி அரசியலில் பல்வேறு வகையான கலந்துரையாடல்கள் இடம்பெறுவது இந்த நாட்டின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது இது புதிய விடயமல்ல. அதேபோல, பங்காளி கட்சிகளுடன் காணப்படுகின்ற உள்ளக நெருக்கடிகளை பற்றி பேசும் அளவுக்கு அரசாங்கம் நோய் வாய்ப்படவில்லை என்றும், இது மிகவும் ஆரோக்கியமான அரசு என்றும் அவர் வலியுறுத்தினார்.