
இலங்கையில் தற்போது பரவல் அடையும் கொவிட் வைரஸ் வகை ஆரம்ப வைரஸை விடவும் மிகவும் கடுமையானதாக இருக்கும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அபாயத்தை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல், முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்காதிருந்தால் நாடு கொரோனா 5 அலையின் போது மேலும் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ளும் என சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், வைரஸின் மாறுபாடுகளான ஆல்பா மற்றும் டெல்டா வகைகள் ஆரம்ப மாறுபாடுகளை விடவும் மிகவும் கடுமையான தாக்கங்களை கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் மாறுபாடுகளின் R0 ஆனது தொடர்ந்து அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
R0 என்பது ஒரு ஆரோக்கியமான நபரிடமிருந்து எத்தனை ஆரோக்கியமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான அறிவியல் மதிப்பீடாகும்.
வுஹான் ஆரம்ப கொவிட் மாறுபாட்டின் R0 மதிப்பு 2.3 மற்றும் 2.7 க்கு இடையில் இருந்தது. ஆல்பா வகையில் இந்த R0 மதிப்பு 4-5 மற்றும் இலங்கையில் தற்போது நிலவும் டெல்டா வகையின் R0 மதிப்பு 5-8 க்கு இடையில் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வுகானில் முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் வகையை விட ஆல்பா மாறுபாடு அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து டெல்டா மாறுபாடு உள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைரஸ் வகையின் மாற்றத்துடன் தடுப்பூசிக்கு எதிராக செயற்படும் வைரஸின் திறனும் அதிகரிக்கிறது. இதனால் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டவர்களும் உயிரிழக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது
இவ்வாறு வைரஸ் மாறுபாடுகள் தோன்றும் போது அவற்றின் தீவிரத் தன்மையும் அதிகரிக்கின்றது. இதனால் ஒவ்வொரு கொவிட் அலையிலும் முன்னரை விடவும் அதிகமான தாக்கத்தை நாடு எதிர் கொள்ள நேரிடுகின்றது.
நாம் இப்போது மூன்றாவது அலையை விடவும் மோசமாக இருக்கும் நான்காவது அலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த அபாயத்தை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல், ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்ளத் தயாரானால், நாட்டை மீண்டும் மீண்டும் முடக்க வேண்டி ஏற்படும்.
இதனால் நாட்டின் பொருளாதாரம் இன்னும் கடினமான ஒரு நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்க முடியாது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.