July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மனித உரிமைகளுக்காக ஓய்வின்றி உழைத்தவர்’: வெளிநாட்டு தூதரகங்கள் இரங்கல்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணத்துக்கு இலங்கையில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களும் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மங்கள சமரவீர இலங்கையில் நட்புறவு, சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்கு ஓய்வின்றி உழைத்தவர் என்று இலங்கைக்காக ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவின் மறைவால் துயரப்படும் இலங்கையர்களுக்கு அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தேசப்பற்றுள்ள, மனிதநேயம் மிக்க ஒரு தலைவராக இருந்ததாகவும் அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவதில் மங்கள சமரவீர முன்னணியாக செயற்பட்டதாக இலங்கைக்காக பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவர் போருக்குப் பின்னரான இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் பிரிட்டிஷ் தூதரகத்தின் இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதில் மங்கள சமரவீரவின் அர்ப்பணிப்புகள் மறக்க முடியாதவை என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவின் மரணத்துக்கு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சரின் மரணம் கவலை தருவதாகவும், இலங்கை மாலைதீவு நட்புறவை வளர்ப்பதில் முன்னோடியாக செயற்பட்டதாகவும் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் குறிப்பிட்டுள்ளார்.