July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மங்களவின் மறைவு இலங்கை அரசியலுக்கு பேரிழப்பு”

துணிச்சல், விவேகம், ராஜதந்திர செயற்பாடுகளை கொண்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் இவரின் மறைவு இலங்கை அரசியலுக்கு பெரும் இழப்பு என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மஹாநாம சமரவீர மற்றும் கேமா பத்மாவதி ஆகியோரின் புதல்வரான மங்கள சமரவீர 1983 ஆம் ஆண்டில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து சுதந்திர கட்சி ஊடாக தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார்.

அரசியலுக்குள் நுழைந்த நாள் முதல் இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களின் போது முக்கிய பங்காளியாக இருந்துள்ளார்.

1995 ஆம் ஆண்டின் பின்னர் சந்திரிகா அரசாங்கத்தில் மிகவும் பலம்வாய்ந்த அமைச்சராக இருந்த அவர் 2002 ஆம் ஆண்டில் உருவான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை வீழ்த்துவதில் முக்கிய நபராக இருந்தார்.

இதன்படி அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வைப்பதிலும் அவரை வெற்றிபெற வைப்பதிலும் பிரதான நபராக அவர் செயற்பட்டார்.
பின்னர், மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் வெளிநாட்டு அமைச்சராக இருந்த போதிலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்.

இதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பெரும் பங்களிப்பை செய்திருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் வெளிநாட்டு அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் செயற்பட்டார்.

அதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு பெரும் பங்களிப்பை செய்திருந்தார்.

இவர் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த காலங்களில் சர்வதேச உறவுகளை சிறப்பாக பேணியவர் என்று பலரும் கூறுவர். அவர் இறுதி காலம் வரையில் சர்வதேச ரீதியிலான இலங்கையின் உறவை பேணுவதற்கு பங்களிப்புகளை செய்துள்ளார்.

இதேவேளை மனித உரிமைகள் தொடர்பான சிவில் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியும் உள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தலுக்கு முன்னரே வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இறுதியாக, அண்மையில் ‘உண்மையான தேசப்பற்றாளர்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து, செயற்பட்டு வந்த நிலையிலேயே மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, மரணித்தார்.

இவரின் மறைவு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன், இலங்கையின் அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று அந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.