May 29, 2025 1:10:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துபாயில் விபத்துக்குள்ளான இலங்கைப் பெண்ணுக்கு 5 கோடி ரூபா இழப்பீடு

துபாயில் வீதி விபத்தில் சிக்கிய இலங்கைப் பெண்ணொருவருக்கு 1 மில்லியன் திர்ஹம் ( 5 கோடி இலங்கை ரூபா)  இழப்பீடு வழங்குமாறு துபாய் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

துபாயில் பணிபுரிந்த தரங்கா தில்ருக்‌ஷி என்ற 45 வயதுடைய பெண் கடந்த வருடம் அங்கு  வீதி விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்திருந்தார்.

குறித்த விபத்தினால் தற்போது சக்கர நாற்காலியில் இருக்கும் அவர், தனது காயங்களுக்கு இழப்பீடு கோரி, அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த விபத்து குறித்து குறிப்பிட்ட தில்ருக்‌ஷி, கடந்த வருடம் மே 24 ஆம் திகதி பர் துபாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள சீப்ரா மஞ்சள் கடவையில் வைத்து இந்த விபத்து நடந்ததாகக் கூறினார்.

”நான் வீதியைக் கடக்கும்போது ஒரு இந்தியர் செலுத்திய கார் என்னை மோதியது. சாரதிக்கு எதிராக போக்குவரத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது மற்றும் அவருக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதித்தது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விபத்தால் தற்போது தான் சக்கர நாற்காலியில் இருக்க வேண்டியுள்ளதாகவும், மற்றவர்களின் உதவி இல்லாமல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர்,  வழக்கறிஞர் குழுவை சேர்ந்த பாப்பினிசேரியின் ஆலோசனையின் படி, துபாய் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதன்படி வழக்கு காப்பீட்டு நிறுவனம் மற்றும் விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு எதிராக இருந்தது.

வழக்கறிஞர் யூனுஸ் மொஹமட், வழக்கறிஞர் மொஹமட் அல் ப்ளூஷி, இப்ராஹிம் அல் சுவைதி மற்றும் வழக்கறிஞர் ருக்கியா அல் ஹஷிமி ஆகியோர் மருத்துவ அறிக்கை, தடயவியல் அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் உட்பட வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த வழக்கின் இறுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு மில்லியன் திர்ஹம் இழப்பீட்டை வழங்கும்படி துபாய் நீதிமன்றம் குற்றவாளியான இந்திய பிரஜைக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.