January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையவழியில் விண்ணப்பித்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாள் வீசா!

இணையம் ஊடாக சுற்றுலா அனுமதியைப் பெற்று நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே தடவையில் 180 நாட்களுக்கான வீசா வழங்கும் திட்டத்தை செயற்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி வீசா கட்டணங்களை அறவிட்டு குறித்த சுற்றுலா வீசாவை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இணையவழி இலத்திரனியல் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் முறைமையின் மூலம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கைத்தொலைபேசி செயலியை பயன்படுத்தி விண்ணப்பித்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக 2021 ஜனவரி 4 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. .

அதற்கமைய, வீசா கட்டணங்களை அறவிட்டு குறித்த சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோசனையை முன்வைத்துள்ளார்.

இதன்படி சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 70 அமெரிக்க டொலர்களும், சார்க் அல்லாத நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 85 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படவுள்ளது.

அத்துடன் சிங்கப்பூர், மாலைதீவு, சீசெல்ஸ் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 50 அமெரிக்க டொலர்களை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.