July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று கொழும்பில் காலமானார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

மங்கள சமரவீர உயிரிழக்கும் போது, அவருக்கு 65 வயதாகும்.

மங்கள சமரவீர இலங்கையின் முன்னாள் அமைச்சர் மஹாநாம சமரவீர மற்றும் கேமா பத்மாவதி ஆகியோரின் புதல்வராவார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து 1983 ஆம் ஆண்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர், 2007 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.

1989 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மங்கள சமரவீர, பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்தின் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு துறைமுகங்கள், விமான சேவைகள் மற்றும் ஊடக அமைச்சராகவும், 2007 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சராகவும், 2015 ஆம் ஆண்டு மீண்டும் வெளியுறவு அமைச்சராகவும், இறுதியாக நிதி அமைச்சராகவும் செயற்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஆட்சிக்கு கொண்டுவருவதில், திரையின் பின் நின்று செயற்பட்டவராக மங்கள சமரவீர கருதப்படுகிறார்.

2020 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தலுக்கு முன்னரே வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இறுதியாக, அண்மையில் ‘உண்மையான தேசப்பற்றாளர்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து, செயற்பட்டு வந்த நிலையிலேயே மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, மரணித்தார்.