
இலங்கையில் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வாராந்தம் 300,000 லீட்டர் திரவ மருத்துவ ஒட்சிஜனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் 120,000 லீட்டருக்கு பதிலாக வாராந்தம் 300,000 லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி தீவிர நிலைமையிலுள்ள நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிஜனை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 120,000 லீட்டர் ஒட்சிஜனை மாதாந்தம் இறக்குமதி செய்வதற்கு 2021 மே 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது நாட்டில் திரிபடைந்த கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதால், ஒட்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு போதுமானளவு ஒட்சிஜனை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு இயலுமான வகையில், வாராந்தம் 300,000 லீட்டர் ஒட்சிஜனை இறக்குமதி செய்வதற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.