நாட்டின் முன் எத்தகைய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், நாம் விட்டுக்கொடுக்க முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் எம்மிடம் உள்ளன என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா நிறைவடைந்த பின்னர், கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது, தலதா மாளிகையின் எசல பெரஹரா பாரம்பரிய முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டதாக குறிக்கும் ஆவணத்தை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, ”நாட்டின் முன் எத்தகைய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், நாம் விட்டுக்கொடுக்க முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் எம்மிடம் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அதில் முதலாவது இடம், புனித தந்தத்துக்காக நடத்தப்படும் அர்ப்பணிக்கப்பட்ட புனித கிரியைகளுக்கு உரியது” என்று கூறியுள்ளார்.
பழங்காலத்திலிருந்தே எமது ஆட்சியாளர்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்தார்கள் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் அந்தப் பாரம்பரியத்தை யுகம் யுகமாகப் பொறுப்பளித்தனர் என்றும், இதற்கமைய பண்டைய மன்னர்கள் மற்றும் நாட்டின் அனைத்துத் தலைவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நானும் புனித தந்தத்துக்காகச் செய்ய வேண்டிய கௌரவங்களுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.