January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்கு நிவாரண பணம் கொடுக்கக் கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை என்கிறார் அமைச்சர் பந்துல

பொருளாதார ரீதியில் நாடு பாரிய நெருக்கடி நிலைமையை சந்தித்துள்ள நிலையில்,நாட்டை முடக்குவதால் மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப் போகின்றது.மக்களுக்கு நிவாரண பணம் கொடுக்கக்கூட அரசாங்கத்திடம் நிதி இல்லையென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அனாவசிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாட்டை முடக்கத்தில் இருந்து விடுவிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன் நெருக்கடிக்கு மத்தியில் கடினமான பயணத்தையே நாம் முன்னெடுத்தோம்.அவ்வாறான நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளாக கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொருளாதார ரீதியில் நாடு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.ஏற்கனவே நாடு முடக்கப்பட்ட வேளையில் முதலீடுகள் இல்லாது, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இல்லாது பாரிய நெருக்கடியை நாம் சந்தித்துள்ளோம். பொருளாதார வளர்ச்சி வேகம் 3.6வீதத்தால் பின்னோக்கி சென்றுள்ளது.வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட மிக மோசமான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாம் ஆட்சியை கையில் எடுக்கையில் இறுக்கமான சில நடவடிக்கைகளை கையாள நேர்ந்தது. அத்துடன் கொவிட் வைரஸ் பரவல் அனர்த்தம் எம்மை மிக மோசமாக பாதித்தது. இவ்வாறான சவால்களை சந்தித்தே எமது அரசாங்கம் முன்னோக்கி செல்கின்றது.ஆகவே வரி கொள்கையில் மாற்றங்களை செய்ய நேர்ந்துள்ளது.விலைஅதிகரிப்பு செயற்பாடுகளையும் கையாண்டோம் எனவும் அவர் மேலும் கூறினார்.