July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆளுந்தரப்பின் கோரிக்கையால் சீற்றமடைந்த ஜனாதிபதி

அமைச்சரவை கூட்டத்தின் போது நாட்டை முடக்கும் தீர்மானங்களை முன்வைக்காது,பிரத்தியேகமாக தீர்மானங்களை அறிவித்தமை குறித்து ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர், நிதி அமைச்சருடனும் இது குறித்து ஜனாதிபதி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நாட்டின் கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடர்ப்பில் சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக அவதானப்படுத்தி வந்த போதிலும்,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிலைமைகளை சுட்டிக்காட்டியபோதிலும் அரசாங்கம் உடனடி தீர்மானங்களை மேற்கொள்ளாது இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் மாநாயக்க தேரர்களின் வலியுறுத்தலை அடுத்து இரண்டு வாரங்கள் நாட்டை முடக்கும் அறிவிப்பை ஜனாதிபதி விடுத்தார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க வேண்டும் என்ற அறிவிப்பை விடுத்தனர்.

பங்காளிக் கட்சிகளின் இந்த அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த உறுப்பினர்களிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளாராம்.அறிவிப்புக்கு முன்னர் கடந்த வாரம் கூடிய அமைச்சரவை கூட்டம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் கூடியுள்ள நிலையில் அதன்போது எவரும் நாட்டை முடக்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கவில்லை.நாட்டின் பொருளாதார நிலைமைகளை தெரிந்தும், கடன் நெருக்கடி நிலைமைகளை அறிந்தும் எவ்வாறு நாட்டை முடக்குவது என்பதை கேட்டவர்கள்,பின்னர் நாட்டை முடக்க வலியுறுத்துகின்றது வேடிக்கையான ஒன்றாகும் எனவும் அவர் தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.