
நாடளாவிய கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் நாடு முடக்கப்பட்டுள்ள போதிலும், இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் வைரஸ் பரவல் நிலைமைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென சகல சுகாதார தரப்புக்கும் பணித்துள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நீண்ட காலம் நாட்டை முடக்குவது குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் இணக்கம் காணவில்லை என்றாலும் சுகாதார தரப்பின் தீர்மானங்கள் இறுதியானதாகும் எனவும் அவர் கூறினார்.
கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமை குறித்து சகல தரப்பையும் தெளிவுபடுத்தி வருகின்றோம்.மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து ஏனைய எந்த செயற்பாடுகளுக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு வெளியில் செல்ல நேர்ந்தால் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும், அது தவிர்ந்து நிறுவன ஊழியர்கள் தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருந்தகங்கள்,தொகை மத்திய நிலையம் திறக்கலாம். தொழிற்சாலைகள், விவசாய செயற்பாடுகள் மற்றும் அத்தியாவசிய போக்குவரத்து முன்னெடுக்கப்படலாம். இவற்றை நாம் தெளிவாக சகல தரப்புக்கும் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.