July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊடகவியலாளர் கைதுகள் குறித்து இலங்கை ஊடக அமைப்புகள் கவலை’

இலங்கையில் ஊடகவியலாளர்களை கைது செய்தல் மற்றும் விசாரணைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளரை பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைய விசாரணைக்கு உட்படுத்துமாறும் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு, பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்தக் கோரிக்கை கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளன.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“லங்கா ஈ நியூஸ் செய்தி வலைத்தளத்தில் ஊடகவியலாளராக கடமை புரியும் கீர்த்தி ரத்நாயக என்பவர் இந்தியத் தூதுவராலயத்துக்கு சில தகவல்களை பெற்றுக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அவரை 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று லங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் குழு எமக்கு அறியத் தந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளரை பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைய விசாரணைக்கு உட்படுத்துமாறும் அவரது உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பாகிய நாம் முதலில் உங்களை வேண்டிக் கொள்கின்றோம்.

அவர் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டு தவிர்ந்த அவர் கடமை புரியும் செய்தி இணையத்தளத்தின் தகவல்கள் மற்றும் மூலாதாரங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், மேலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் ‘லங்கா ஈ நியூஸ்’ ஆசிரியர் குழு குறிப்பிடுகின்றது.

நீதித்துறை செயற்பாட்டில் ஏதேனும் ஒரு சம்பவம் தொடர்பில் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களை தவிர அவரிடம் காணப்படும் மற்ற மூலாதாரங்களை வெளிப்படுத்தாது அதன் இரகசியத் தன்மையைப் பேணுவதானது ஊடகவியலாளர்களின் பணிசார் பொறுப்பு மற்றும் ஊடகவியல் மரபு என்பதனை இந்தத் தருணத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். ஆகவே , கீர்த்தி ரத்நாயக சம்பவம் தொடர்பான அனைத்து உண்மை தகவல்களையும் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், சட்ட ஏற்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தள ஆர்வலரான துஷாரா வன்னியாராச்சி என்பவரின் வீட்டை அதிகாலை வேளையில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியதாக கூறப்படுகின்றமை, தமிழன் பத்திரிகை பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜா தங்கியிருந்த வீட்டுக்குள் சி.ஐ.டி.என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் நுழைய முற்பட்டமை, அதேபோன்று மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரிக்கப்பட்டமை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலே குறிப்பிட்ட சமீபத்திய சம்பவங்களின் பின்னணி தெளிவாக இல்லை என்பதால் இந்தச் சம்பவங்கள் தொடர்பான தெளிவான தகவல்களை சமூகத்துக்கு தெரியப்படுத்துவது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.

ஊடகவியலாளர்களை பயமுறுத்தும் விதத்தில் செயல்படுவதானது அவர்களின் ஊடக சுதந்திரத்தை தடுப்பதுடன், மேலும் அவர்களின் ஊடகப் பணி நடவடிக்கைகளின் செயற்றிறனைப் பாதிக்க வழிவகுக்கும் என்பதால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட ஏற்பாட்டு விதிகளுக்குள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்துமாறும், ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படும் தருணங்களில் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை சமூகமயமாக்குமாறும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற வகையில் உங்களை கேட்டுக் கொள்கின்றோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.