அந்நிய செலாவணியை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய வங்கி, இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில் அந்நிய செலாவணியில் சில கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அத்தகைய அட்டைகளின் தவறான பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கும் அத்தகைய வங்கிகளின் அந்நியச் செலாவணி நிலைமைகளுக்கு அமைவாக கொடுக்கல்-வாங்கல்களை முன்னுரிமைப்படுத்துவதற்கு சில வங்கிகள் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளை பயன்படுத்தி சட்ட ரீதியான கொடுக்கல்-வாங்கல்களை மேற்கொள்வதில் எவையேனும் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் அது குறித்து தொடர்புடைய வங்கிகளை தொடர்பு கொள்கின்ற அதேவேளை, தற்போது வெளிநாட்டு செலாவணியினை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொது மக்களை மத்திய வங்கி கோரியுள்ளது.