November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளைப் போல் மலையகக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்’

வடக்கு, கிழக்கில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதைப்  போல் மலையகக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று வட, கிழக்கு மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு விடயங்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வட, கிழக்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது வரவேற்கக் கூடியது.

அதேபோல ‘மலையகத்திலும்  சம்பள உயர்வு பிரச்சினை, தடுப்பூசிகள் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சலுகைகள் கிடைக்காத சூழ்நிலை தடுப்பூசி தொடர்பாக சரியான விழிப்புணர்வு இல்லாத நிலைமை என பல்வேறு பிரச்சினைகளை எமது மக்கள் சந்தித்து வருவதையும்’ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொடுக்க வேண்டுமாக இருந்தால் மலையகத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம் மாத்திரமே அரசாங்கத்திற்கான ஒரு பாரிய அழுத்தத்தினை கொடுக்க முடியும். மலையக கட்சிகள் தனித்து நின்று செயல்படுவதால் எதனையும் சாதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை  அரசாங்கம் 2000 ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இந்த சூழ்நிலையில், அந்த தொகையானது மலையகத்திலே கடந்த காலங்களில் கட்சி ரீதியாக வழங்கப்பட்டதை போல் அல்லாமல் உரியவர்களுக்கு சென்றடைவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் சரியானவர்களை இனங்கண்டு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலத்தின் தேவையறிந்து இந்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. எனவே இன்னும் பல உதவிகளை இந்தியா ஊடாக பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் எங்களுடைய வெளியுறவு கொள்கையில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.