November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக நிதி அமைச்சர்- நோர்வே தூதுவர் கலந்துரையாடல்

இலங்கையில் நோர்வேயின் முதலீடுகளை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மற்றும் நோர்வே தூதுவர் ட்ரைன் ஜெரான்லி எஸ்கடேல் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பஸில் ராஜபக்‌ஷவை நோர்வே தூதுவர் ட்ரைன் ஜெரான்லி எஸ்கடேல் சந்தித்தபோதே, இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் நோர்வேயின் முதலீடுகளை அதிகரிக்கும் வழிமுறைகள், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பொருளாதாரச் சவால்கள் மற்றும் அடுத்து வரும் ஆண்டுகளில் பொருளாதார மீட்சிக்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்துக்காக நோர்வே தூதுவர், அமைச்சருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் நிலைமைகள் சீராகும் சந்தர்ப்பத்தில் சுற்றுலாத் துறையை முழு அளவில் மீள ஆரம்பிக்க முடியுமாகும் என்று நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பல நாடுகளில் காணப்படும் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகளவு தொழில்வாய்ப்புகள் இல்லாமல் போயிருத்தல் போன்றன தொடர்பான சவால்கள் பற்றியும், இந்தச் சவால்களை நோர்வே எவ்வாறு கையாண்டிருந்தது என்பது குறித்தும் தூதுவர் விளக்கியுள்ளார்.