November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்காளிக் கட்சிகள் தொடர்பில் பொதுஜன பெரமுன அதிருப்தி!

அமைச்சரவையில் மௌனமாக இருந்துவிட்டு வெளியே வந்து நாட்டை முடக்குமாறு அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியமை கீழ்த்தரமான செயல் என்று அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டை மூடுமாறு வலியுறுத்தி விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கட்சிகள் அடங்களாக அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கடந்த வாரம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது.

அந்தக் கடிதம் தொடர்பில் இன்று கொழும்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதன்போது அவர், நாட்டை மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தாம் கவலையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன். அமைச்சரவையில் நாட்டை மூட மாட்டோம் என்று கூட்டாக தீர்மானம் எடுத்த பின்னர், வெளியில் சென்று நாட்டை மூட வேண்டும் என்று அமைச்சரவையில் இருந்தவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அமைச்சரவையில் பேசுவதற்கு முதுகெலும்பு இல்லாதவர்களே என்றும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.