கொவிட் -19 தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது சுமார் 5,000 கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தடுப்பூசி மட்டுமே வைரஸிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் கர்ப்பிணி தாய்மாருக்கு தடுப்பூசி ஏற்றும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன நேற்று அறிவித்திருந்தார்.
தற்போது வரையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் 27 கர்ப்பிணி தாய்மார் மரணித்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க இடமளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், “சிறந்த தடுப்பூசி” எது என்று தம்மிடம் கேள்வி எழுப்பப்படுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் குறிப்பிட்டார்.
“நீங்கள் பெறும் முதல் தடுப்பூசிதான் சிறந்த தடுப்பூசி, கொவிட் -19 தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை” என அவர் கூறினார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தா போதிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் கூறினார்.