
ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை மதித்து, மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஜனநாயக ஆட்சியை உடனடியாக மீளமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தாலிபான்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரதான அரசியல் எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி ஆப்கானிஸ்தானின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பான கவனம் செலுத்தி வருவதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடாக இருப்பதால், இக்காலப் பகுதியில் சார்க் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்ய அவர்களது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மேலும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளரை கேட்டுக் கொள்ளுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறான நெருக்கடியான நிலையில் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச கடமைகள் பற்றியும் நினைவூட்ட விரும்புகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய நாட்டுக்கு மீளவும் அனுப்பி வைக்கக் கூடாது என்னும் பொறுப்புக்கு மதிப்பளிக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தி விசேடமாக அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்ளுகின்றது.
இந்த சூழலில், தற்போது இலங்கையில் வசிக்கும் அல்லது எதிர்காலத்தில் இலங்கைக்குள் நுழையக்கூடிய ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிக்க அரசாங்கத்துக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பு உள்ளது”
என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.